செய்யாறில் பெண்ணை கொன்று 6 பேரை விரட்டி வெட்டிய வியாபாரி அடித்து கொலை
- வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அலிவிடை தாங்கி பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70).
இவர்களுக்கு பூர்வீக சொத்து அந்த பகுதியில் உள்ளது. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் (50). 2-வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி (45) இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
இளநீர் வியாபாரியான சுப்பிரமணி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு விவசாய நிலத்துக்கு வந்தார். அப்போது அங்கு செல்வம் மனைவி சங்கீதா (45) துணி துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்திருந்தார்.
இதை பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காயகட்டியிருந்த கயிற்றை அறுத்துள்ளார்.
இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும் கத்தியால் சுப்பிரமணி வெட்டினார். இதை பார்த்த பக்கத்து நிலத்திலிருந்த வெங்கடேசன் மனைவி வேண்டா அமிர்தம் (55) எதற்காக தனியாக இருக்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டார்.
அப்போது வேண்டா அமிர்தத்தின் கழுத்தில் சுப்பிரமணி வெட்டினார். இதில் வேண்டா அமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி விவசாய நிலத்தில் இருந்து தப்பி ஓடினார். அப்போது வெறி பிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி சங்கீதாவை விரட்டி சென்றார். எதிரே சங்கீதாவின் கணவர் செல்வம் வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் சுப்பிரமணி கத்தியுடன் பின் தொடர்ந்து வந்தார். அவரை மடக்கி எதற்காக என் மனைவியை வெட்டினாய் என வெங்கடேசன் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வம் அவரது மனைவி சங்கீதா வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் நடுரோட்டிலேயே சுப்பிரமணி வெட்டி விட்டு தப்பி சென்றார்.
அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு ஓடினார்.
தொடர்ந்து வெம்பாக்கம் டவுனில் பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி( 55) அவரது மனைவி லதா என்பவரையும் சுப்பிரமணி கத்தியால் வெட்டினார்.
இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் காந்தி தனது கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கினார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேண்டா அமிர்தம், சுப்பிரமணி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.