உள்ளூர் செய்திகள்

கோவூர் ஊராட்சியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

Published On 2022-12-07 11:41 GMT   |   Update On 2022-12-07 11:41 GMT
  • சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும்.
  • பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குன்றத்தூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குன்றத்தூர் - போரூர் சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது இதனை தடுக்கும் விதமாக கோவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்பவர்களை அழைத்து கூட்டம் ஒன்று ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு மாட்டின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News