காரைக்குடியில் நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சென்னை ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேருக்கு தொடர்பு
- கடந்த ஒரு ஆண்டாக ரவிச்சந்திரனை கண்காணித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
- ஹவாலா பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டிணம் சோமு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் காரைக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர்களிடம் 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு கடந்த 11-ந்தேதி சென்னை சென்றார்.
அந்த தங்க கட்டிகளை சென்னை சவுகார்கேட்டையில் உள் நகை தொழிற்சாலையில் கொடுத்தார். அப்போது ஏற்கனவே அவர்கள் தயார் செய்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ. 2 கோடியே 2 லட்சம் ஆகியவற்றை ரவிச்சந்திரன் வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டார். அவர் 12-ந்தேதி அதிகாலை காரைக்குடி கழனிவாசல் பஸ் நிலையம் வந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று அவர் வைத்திருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு கீழே இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார். அதன்பேரில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில், சிவகங்கை சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு நமச்சிவாயம், காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ரவிச்சந்திரனை கடத்திய கார், சென்னை அமைந்த கரையை சேர்ந்த சூரியா என்ற நாகேந்திரன் (57) என்பவர் வாடகைக்கு எடுத்து சென்ற கார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரின் பதிவு எண் மாற்றப்பட்டபோதிலும், அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த காரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஓட்டிச்சென்றதும் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் நாகேந்திரனை பிடித்து விசாரணை நடத்தியபோது அவனது தலைமையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது தெரி யவந்தது.
இதையடுத்து நாகேந்திரன், பால்ராஜ், விஜயகுமார், சாமுவேல், சென்னை சிந்தாரிபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், சூளைமேடு பெருமாள் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சம் ரொக்கம், 1 கிலோ 471 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 1 கிலோ 90 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரவணன் என்பவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நாகேந்திரன், ஊர்க்காவல் படை கமாண்டராக பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அதேபோல் சதீஷ்குமாரும் ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர். சாமுவேல் தற்போது சென்னையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்த கும்பல் கடந்த ஒரு ஆண்டாக ரவிச்சந்திரனை கண்காணித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இவர்கள் ஹவாலா பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1½ கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதில் ரூ.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.