உள்ளூர் செய்திகள்

விற்பனையாளர் மீது தாக்குதலுக்கு எதிர்ப்பு- காஞ்சிபுரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு

Published On 2022-09-18 15:35 IST   |   Update On 2022-09-18 15:35:00 IST
  • காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
  • மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் செவிலிமேடு ஜெம் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைக்கு நேற்று இரவு வாலிபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.

இதனை கடையின் விற்பனையாளர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பீர் பாட்டிலால் விற்பனையாளர்கள் தேவராஜ் மற்றும் முனுசாமி ஆகியோர்ரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த தேவராஜ், முனுசாமி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மதுக்கடை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் 3 மதுக்கடைகள், செவிலிமேடு பகுதியில் 3 மதுக்கடைகள், கலியனூர், வேடல், வையாவூர், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 3 கடைகள் என மொத்தம் 9 டாஸ்மாக் கடைகளும் உடனடியாக மூடப்பட்டது.

மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, அரசு மதுபான கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே மதுக்கடை ஊழியர்களை தாக்கியதாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுமன், பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News