உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

புதுக்கடை அருகே கோவில் விழாவில் நகை பறித்த சென்னை பெண் உட்பட 3 பேர் கைது

Published On 2022-07-01 05:12 GMT   |   Update On 2022-07-01 05:12 GMT
  • பிடிபட்ட நபர்கள் மீது தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்தது.
  • இதையடுத்து புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து குமாரியை தக்கலை மகளிர் ஜெயிலிலும், குமாரவேல், மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.

கிள்ளியூர்:

புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த போது, கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை திருடியுள்ளனர். அந்த பெண் கூட்டத்தில் சத்தம் போட்டவுடன் பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செயின் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக அந்த நபர்களை புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் சென்னை, கொளத்தூர் பகுதி தங்கராஜ் மகன் குமாரவேல் (48), குமிடிபூண்டி பகுதி சந்தியா மகன் மணிகண்டன் (37), அதே பகுதி குமாரவேல் மனைவி குமாரி (40) என தெரிய வந்தது.

இவர்களுடன் வேறு சிலரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 3 நபர்களும் பொது மக்களிடம் மாட்டிய உடன், கிடைத்த நகையுடன் மற்றவர்கள் மாயமானதாக தெரிகிறது.

போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் பிரமாண்ட விழாக்கள், பொதுக்கூட்டங்களில் இது போன்று கைவரிசை காட்டுவது தெரிய வந்துள்ளது.

மேலும் பிடிபட்ட நபர்கள் மீது தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து குமாரியை தக்கலை மகளிர் ஜெயிலிலும், குமாரவேல், மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.

இதற்கிடையில் சம்மந்தப்பட்ட கோவில் விழாவில் கலந்து கொண்ட பைங்குளம், முக்காடு பகுதியை சேர்ந்த சிறிய பிள்ளை மனைவி தெரசம்மாள் (55) என்பவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் விழா கூட்டத்தில் மாயமானதாக புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார்.

Tags:    

Similar News