உள்ளூர் செய்திகள்

பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் 'கல்வெட்டு'

Published On 2023-06-12 07:29 GMT   |   Update On 2023-06-12 07:29 GMT
  • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
  • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குத்தாலம்:

நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News