உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே மனைவியை கொன்று மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது

Published On 2022-11-07 12:32 IST   |   Update On 2022-11-07 12:32:00 IST
  • சுதாமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள கழனி பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது27). மதுராந்தகத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாமதி (25).இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 4-ந்தேதி காலை ரஞ்சித்குமார், தனது மனைவி சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். மேலும் மனைவியின் உடலை அடக்கம் செய்ய அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்தார்.

இதற்கிடையே சுதாமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சுதாமதியின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது.மேலும் அவரது கழுத்து கயிறால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று விட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடக மாடியது தெரிந்தது.

இதுகுறித்து கைதான ரஞ்சித் குமார் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 4-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்கு வந்தேன். அப்போது மனைவி சுதாமதி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு விசாரித்தேன்.இதில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையால் சுதாமதியின் தலையில் அடித்தேன்.இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அயன் பாக்ஸ் வயரால் சுதாமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக துணியை அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி மனைவி சுதாமதி இறந்து விட்டதாக நாடகமாடி உடலை அவசர அவசரமாக புதைக்க இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர்களது 2 குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Similar News