உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த பெண் வெட்டிக்கொலை

Published On 2022-12-16 10:32 IST   |   Update On 2022-12-16 10:32:00 IST
  • எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
  • அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

தக்கலை:

தக்கலை அருகே மேக்கா மண்டபம் மூலச்சல் பன்றி வெட்டான்பாறை விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 54).

இவரது மகள் ஜெய பிரின்ஷா (31). மகன் ஜெயா பிரின்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரின்ஷா அழகிய மண்டபம் தச்சகோடு பகுதியைச் சேர்ந்த எபனேசர் (35), டெம்போ டிரைவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெபசேபன் (14), ஜெபஆகாஷ் (13) என்ற மகன்கள் உள்ளனர்.

ஜெபபிரின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். ஜெப பிரின்சாவிற்கும் எபனேசருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி அணிந்து செல்லும் ஆடை பிடிக்கவில்லை என்று எபனேசர் அடிக்கடி கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஜெபபிரின்ஷா சகோதரர்ஜெப பிரின்சிற்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக எபனேசருடன் சென்றிருந்தார். இரவு எபனேசரும் ஜெப பிரின்ஷாவும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பரைக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த எபனேசர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி ஜெப பிரின்சாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெபபிரின்சா மயங்கி விழுந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் எபனேசர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெப பிரின்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜெபசிங் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எபனேசர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News