உள்ளூர் செய்திகள்

வீட்டில் சூதாடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது

Published On 2023-02-25 10:50 IST   |   Update On 2023-02-25 10:50:00 IST
  • போலீசார் அவற்றை பறிமுதல் செய்து ஈப்பன்வர்கீசை கைது செய்தனர்.
  • ஈப்பன்வர்கீஸ் பணியில் இருந்தபோது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி வேலையை இழந்துள்ளார்.

கூடலூர்:

இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ந்தவர் ஈப்பன்வர்கீஸ். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் குமுளியில் தமிழக எல்லையோரம் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சட்டவிரோதமாக வன விலங்குகள் வேட்டை மற்றும் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கட்டபணை டி.எஸ்.பி. நவுஸ்சாத்மோகன், குமுளி இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அவரது அறையில் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு துப்பாக்கி, 2 ஏர் ரைபிள்கள், ஏராளமான தோட்டாக்கள், வெடி பொருட்கள், காட்டுபன்றி பற்கள் ஆகியவை இருந்தது.

போலீசார் அவற்றை பறிமுதல் செய்து ஈப்பன்வர்கீசை கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குமுளி தோப்புராம்குடி பகுதியை சேர்ந்த 10 பேரை கைது செய்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 40யை பறிமுதல் செய்தனர்.

ஈப்பன்வர்கீஸ் பணியில் இருந்தபோது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி வேலையை இழந்துள்ளார். பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்த அவர் கடந்த 2022 நவம்பரில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.2.51 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவரது தலைமையில் வன விலங்குகள் வேட்டையாடியதாக தமிழக வனத்துறை புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News