உள்ளூர் செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது கொட்டும் கனமழை- 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-11-11 04:06 GMT   |   Update On 2022-11-11 04:06 GMT
  • டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் அதிகாலை 4 மணியில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தஞ்சை, வல்லம், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது தவிர டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 6 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 3 மாவட்டங்களிலும் சேர்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News