உள்ளூர் செய்திகள்

அன்னூர் பகுதியில் கனமழையால் 15 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின

Published On 2023-11-10 12:21 IST   |   Update On 2023-11-10 12:21:00 IST
  • காளியாபுரம், பணந்தோப்பு மயில், தர்மர் கோவில் வீதி பகுதியில் 40 வீடுகளில் மழை நீர் புகுந்தது.
  • குப்பனூர், ஆம்போதி, பொகலூர் ஊராட்சிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை காலை 9 மணி வரை இடைவிடாது கொட்டித்தீர்த்தது.

இந்த மழையால் அன்னூர் பகுதியில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் கணுவக்கரையில் ஒரு தோட்டத்து கோழிப்பண்ணையில் 2500 கோழிகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

அன்னூர் கட்டபொம்மன் நகர், அல்லிகுளம், தாசபாளையம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த 15 ஆயிரம் வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வாழைத்தோட்டத்தில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றது.

காளியாபுரம், பணந்தோப்பு மயில், தர்மர் கோவில் வீதி பகுதியில் 40 வீடுகளில் மழை நீர் புகுந்தது. குப்பனூர், ஆம்போதி, பொகலூர் ஊராட்சிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

பழனி கிருஷ்ணா அவென்யூவில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்கு பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் 100 அடி ஆழ கிணறு ஒன்று நிரம்பி அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது. ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

Tags:    

Similar News