உள்ளூர் செய்திகள்

நெல்லை மருத்துவ கல்லூரிக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும்- குட்கா வழக்கில் கைதானவர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-12-21 09:52 GMT   |   Update On 2022-12-21 09:52 GMT
  • அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர்.
  • பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

மதுரை:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தர், சிவக்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்ததாக எங்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் கோர்ட்டு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் சண்முக சுந்தர் ரூ.50 ஆயிரமும், சிவக்குமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் நெல்லை மருத்துவ கல்லூரிக்கு நலத்திட்ட உதவி தொகையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2 பேருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News