எண்ணூரில் வேலைக்கு சென்ற 2 சிறுமிகள் மாயம்
- கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அவர்கள் இருவரும் இறால் பண்ணைக்கு வேலைக்கு சென்றனர்.
- எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வில்லியர் காலனி, ரேட்டம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சந்தியா (வயது13), முத்துவின் தங்கை ரேவதியின் மகள் தீபா (14). இருவரும் அதேபகுதியில் வசித்து வந்தனர்.
சந்தியாவும், தீபாவும் எண்ணூர் சிவன்படை குப்பம் அருகில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்தனர். காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்கள்.
கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அவர்கள் இருவரும் இறால் பண்ணைக்கு வேலைக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து முத்து, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சந்தியா, தீபா ஆகிய 2 சிறுமிகளையும் தேடி வருகிறார்கள்.
சிறுமிகள் காணாமல் போய் 25 நாட்கள் ஆகியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.