கவர்னர் ஆர்என் ரவி
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணம்
- சென்னையில் இருந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
- கவர்னர் வருகையையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர்.
நெல்லை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். பகல் 12 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறும் வ.உ.சி. 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
அங்கு வ.உ.சி. குறித்த புத்தகத்தை வெளியிடும் அவர் 12.45 மணிக்கு கார் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் மாலை 3.30 மணிக்கு தென்காசி மாவட்டம் மத்தாளம்பாறைக்கு செல்கிறார். அங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற சோகா கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனமான சோகா டெக்னாலஜி நிறுவனத்துக்கு செல்கிறார்.
மாலை 5.40 மணிக்கு கோவிந்தபேரி சோகோ டெக்னாலஜி நிறுவனத்துக்கு செல்கிறார். அங்கு அந்த நிறுவனம் பராமரித்து வரும் பள்ளிக்கூடத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து அந்த கிராம மக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். பின்னர் கலைநிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். அன்று இரவு குற்றாலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார்.
மறுநாள் 19-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி ஆய்க்குடி அமர்சேவா சங்க 40-வது ஆண்டு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். பின்னர் தூத்துக்குடிக்கு செல்லும் அவர் அங்கிருந்து மாலை 3.45 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர்.