உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம், பவானி சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

Published On 2023-03-21 16:20 IST   |   Update On 2023-03-21 16:20:00 IST

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்ப காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை நிலவும் வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம்இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

    வழக்கம் போல் நேற்றும் மாவட்டம் முழுவதும் அனல் காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை வருவது போல் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பவானி பகுதியில் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏராளமான வாழைகள் முறிந்து சேதமானது. இந்த மழையின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    கோபிசெட்டிபாளையம்-26.2, பவானி-28.6, எலந்தகுட்டை மேடு-16.2, மாவட்டம் முழுவதும் 71 மி.மீ. மழை பெய்தது.

    Tags:    

    Similar News