உள்ளூர் செய்திகள்

சிறுமியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை- நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-03-16 14:47 IST   |   Update On 2023-03-16 14:47:00 IST
  • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நாகர்கோவில்:

வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (வயது 23).

இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து எவரெஸ்ட் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமினில் விடுதலை ஆனார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து எவரெஸ்ட் கோர்ட்டில் ஆஜரானார்.

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் ஜெயில் தண்டனையும் மற்றும்ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். எவரெஸ்ட்டிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

Tags:    

Similar News