உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை 5 வழித்தடங்களில் நடத்த அனுமதி

Published On 2023-09-19 07:45 GMT   |   Update On 2023-09-19 07:46 GMT
  • 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிலைகள் நாளை முதல் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

இதையொட்டி மாவட்டத்தில் 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

விநாயகர் சிலை பாதுகாப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் வைத்து பிரதிஷ்டை செய்த சிலைகளை நாளை 20-ந் தேதி, 22.09.23 மற்றும் 24.09.2023 ஆகிய மூன்று நாட்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகளில் 248 சிலைகள் கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 255 சிலைகள் சம்மந்தப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள ஏரிகள், குளங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் கடற்கரை கொண்டு செல்லப்படும்.

மதுராந்தகத்தில் இருந்து முதுகரை சந்திப்பு வழியாக கடலூர் குப்பம் கொண்டு செல்லப்படும். மேல் மருவத்தூரில் இருந்து சித்தாமூர் வழியாக தழுதாலிகுப்பம் கொண்டு செல்லப்படும். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சூனாம்பேடு வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்லப்படும். தொழப்பேடுல் இருந்து கயப்பாக்கம் வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அத்தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 72001 02104 மற்றும் 044-2954 0888 ஆகிய பிரத்யேக எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News