உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து வசதி இல்லாததால் 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்

Published On 2023-07-11 05:32 GMT   |   Update On 2023-07-11 05:32 GMT
  • காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
  • பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

காந்திகிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளி அமைந்துள்ளது. வனத்துறையினர் தடை காரணமாக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கரடு முரடான பாதை என்பதால் மோட்டார் சைக்கிள்களையும் இயக்க முடியாது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் 2 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ளது. எனவே பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடும் என்பதால் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி வரை நடந்து சென்று வருகின்றனர். இதே போல பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும் மாலையில் பள்ளி முடிந்து வரும்போது இருட்டி விடுவதாலும் குழந்தைகள் அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமம் வரை முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News