சாலி கிராமத்தில் வேலை பார்த்த ஓட்டலில் கள்ளச்சாவி தயாரித்து ரூ.54 ஆயிரம் கொள்ளையடித்த மேலாளர் கைது
- சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது.
- கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.
போரூர்:
சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த மாதம் 24-ந் தேதி பணப்பெட்டியுடன் ரூ.54 ஆயிரம் ரொக்கம் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவு கருவிகள் கொள்ளை போனது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், சப்- இன்ஸ்பெக்டர் இளம்வழுதி, ஏட்டு ராஜ்மோகன், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்த போது அதே நிறுவனத்தில் முகப்பேர் கிளையில் மேலாளராக வேலை பார்த்துவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார், மற்றும் அவரது நண்பரான கார் டிரைவர் ராசுக்குட்டி என்கிற ராஜி ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.
அப்போது தன்னிடம் இருந்த கடையின் ஷட்டர் மற்றும் முன்பக்க கண்ணாடி கதவுக்கான சாவிகளுக்கு கள்ளச்சாவி தயாரித்து நண்பருடன் சேர்ந்து பணம் இருந்த லாக்கரை தூக்கி சென்று உள்ளார்.
வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.3 லட்சம் வரை விற்பனை பணம் இருக்கும் என்று திட்டமிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றினார்.
ஆனால் கொள்ளை நடந்த அன்று ஆன்-லைன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவில் விற்பனை நடந்ததால் ரூ.54ஆயிரம் மட்டுமே லாக்கரில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்ததாக சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.