செங்குன்றம் அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன புகையை 15 மணி நேரம் போராடி கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
- குடோனில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை பரவியது. சிறிது நேரத்தில் அந்த புகை மண்டலம் பாதையே தெரியாத அளவுக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளும் பரவத்தொடங்கியது.
- ரசாயனங்கள் தொடர்ந்து புகையாக மாறி வெளியேறியதால் அதனை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.
செங்குன்றம்:
செங்குன்றம் அருகே உள்ள பாயாசம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் உள்ளது.
நேற்று அதிகாலை மழை பெய்து கொண்டிருந்த போது குடோனில் இருந்த ரசாயன பொருட்கள் மீது தண்ணீர் பட்டதாக தெரிகிறது.
இதில் குடோனில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை பரவியது. சிறிது நேரத்தில் அந்த புகை மண்டலம் பாதையே தெரியாத அளவுக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளும் பரவத்தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன புகை வெளியேறுவதை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் ரசாயனங்கள் தொடர்ந்து புகையாக மாறி வெளியேறியதால் அதனை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பகுதியில் ஆம்புலன்சுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் சுமார் 15 மணிநேரம் போராடி குடோனில் இருந்து ரசாயன புகை வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. இரவு 9 மணி வரை ரசாயன புகை வெளியேறிய இடத்தில் ஆம்புலன்சில் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுண்ணாம்பு கலந்த மண்ணை கொட்டியும், நச்சுப்பொருட்களை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியும் புதைத்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.