உள்ளூர் செய்திகள்

போலி 'பாஸ்போர்டில்' வங்காளதேசம் செல்ல முயன்ற பெண் கைது

Published On 2022-11-29 07:34 GMT   |   Update On 2022-11-29 07:34 GMT
  • கடந்த வாரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
  • வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம்(37)என்ற பெண் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை சரி பார்த்த போது அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து ரீனா பேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து அவர் மேற்குவங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவியதும், இந்தியாவில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜென்டுகள் மூலம், பணம் கொடுத்து இந்த போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது.

அவர் இந்த போலி பாஸ்போர்ட் எதற்காக வாங்கினார்? இந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெங்கு சென்றார்? சென்னைக்கு எதற்கு வந்தார்? எங்கு தங்கி இருந்தார்? அதனை தயாரித்து கொடுத்தவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.

பின்னர் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரீனாபேகம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ரீனாபேகம் விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் இதை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News