உள்ளூர் செய்திகள்

மேம்பால பணிக்கு இரும்பு பொருட்கள் ஏற்றிவந்த போது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-08-15 07:21 GMT   |   Update On 2022-08-15 07:21 GMT
  • சிறுவாக்கம் என்ற இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றன.
  • மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126 கிலோமீட்டர் தூரம் ஆறு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பஞ்செட்டி- சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மீஞ்சூர் அடுத்த சிறுவாக்கம் என்ற இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றன.

இதற்காக கும்மிடிப்பூண்டியில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. சிறுவாக்கம் பகுதியில் வந்தபோது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி திடீரென லாரியின் மேல் பகுதியில் உரசியது.

இதில் லாரியில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்தார். சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரி முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் லாரி முழுவதும் எரிந்து நாசம் ஆனது. அதில் இருந்த இரும்பு பொருட்களும் சேதம் அடைந்தன. லாரியில் தீப்பிடித்ததும் டிரைவர் உடனடியாக கீழே இறங்கியதாலும், மின்சாரம் தாக்காததாலும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி உயர் அழுத்த மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News