உள்ளூர் செய்திகள்

சுரங்கத்துறை பெண் அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல்- வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-02-21 10:30 IST   |   Update On 2023-02-21 10:30:00 IST
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
  • போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகிந்தர் உரனெவ், ராஜராஜேஸ்வரன், கேசவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதி மலைகளால் சூழப்பட்டு இயற்கை வளம் நிரம்பிய பகுதியாகும். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் மீது பல்வேறு கிராமப் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நத்தம்-மதுரை சாலையில் உள்ள பரளிபுதூர் டோல்கேட் அருகே மணல் திருட்டில் ஈடுபடுவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் மாரியம்மாள், அலுவலக உதவியாளர்கள் வாசுதேவன், சதீஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக சுமார் 2 யூனிட் கிராவல் மணலுடன் வந்த டாரஸ் லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த டிரைவர் ஹிந்தியில் பேசியுள்ளார். அவரிடம் லாரி சாவியை வாங்கி வைத்திருந்தபோது அங்கு வந்த லிங்கவாடியை சேர்ந்த சுரேஷ் மற்றும் கணேசன், ராஜேஷ் ஆகியோர் இந்த வண்டி யாருடையது தெரியுமா? சாவியை தராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பின் உதவி இயக்குனர் கையில் வைத்திருந்த சாவியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் தர மறுக்கவே உதவி இயக்குனரை தாக்கி சாவியை பறித்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின் அனைவரையும் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளை உடன் வந்தவர்கள் அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்று விட்டனர். பின் உடன் வந்தவர்கள் உதவியோடு டாரஸ் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகிந்தர் உரனெவ், ராஜராஜேஸ்வரன், கேசவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுரேஷ், கணேஷ், ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News