உள்ளூர் செய்திகள்

தாரமங்கலத்தில் டிரைவர் கொடூர கொலை- மரம் வெட்டும் மிஷினை கொண்டு உடலை துண்டு துண்டாக வெட்டினர்

Published On 2023-01-09 13:11 IST   |   Update On 2023-01-09 13:11:00 IST
  • கொலையுண்ட மணி, டிரைவர் தொழிலை தவிர மரங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
  • மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு மணியிடம் பேசியுள்ளார். அதன்பிறகு மணியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இதனிடைேய தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மணி 2 கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதையடுத்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் மணி உடலை மீட்டு பார்வையிட்டனர். மர்ம நபர்கள், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பாதி உடலை கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன.

கொலையுண்ட மணி, டிரைவர் தொழிலை தவிர மரங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சக தொழிலாளர்களுடன் சேர்ந்து, விலை உயர்ந்த மரங்களை தோட்டங்களுக்கு நேரடியாக சென்ற வாங்கி அதை கதவு, ஜன்னல் மற்றும் மர பொருள்கள் செய்ய அளவுக்கு ஏற்ப துண்டு துண்டாக வெட்டி லோடு, லோடாக லாரிகளில் ஏற்றி அனுப்பி வந்தார். இதில் பணம் மழை கொட்டியது.

இதில் ஏற்பட்ட போட்டி காரணமாகவே மணியை சக தொழிலாளர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஏனெனில் மரம் அறுக்கும் மிஷின் மூலம் மணியின் 2 கைகள் தனியாகவும், 2 கால்கள் தனியாகவும், உடலை 2 துண்டாகவும் அறுக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகத்தின்பேரில், மணியுடன் வேலை பார்த்து வந்த சக தொழிலாளர்கள் 3 பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News