உள்ளூர் செய்திகள் (District)

சிவன் கோவிலில் ஒற்றை காலில் நின்று பக்தர்கள் போராட்டம்

Published On 2024-02-05 09:53 GMT   |   Update On 2024-02-05 09:53 GMT
  • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
  • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News