உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தை வாட்ஸ்அப் மூலம் தூண்ட முயன்ற கடலூர் கல்லூரி மாணவன் கைது

Published On 2022-07-19 10:08 GMT   |   Update On 2022-07-19 10:08 GMT
  • கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
  • தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

கடலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

யார் யார் வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கடலூரிலும் இதேபோன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் பேசியதாக போலீசார் காதுக்கு எட்டியது.

உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் விஜய். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது செல்போனை சோதித்தபோது வாட்ஸ்-அப் குழுக்கள் இருந்தது.

இதனை பரிசோதிக்கும் போது கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்ட முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவர் விஜய்யை கைது செய்தனர். இந்த வாட்ஸ்-அப் குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News