உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி உயர்வை ரத்து செய்ய கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

Published On 2022-08-30 10:48 GMT   |   Update On 2022-08-30 10:48 GMT
  • ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
  • தமிழகம் முழுவதும் 180 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் 180 இடங்களில் நடந்தது.

சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வேலையின்மை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அண்ணாசாலையை முற்றுகையிட முயன்றனர். முன்னெச்சரிக்கையாக போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதையும் மீறி சாலையில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200- க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி சென்றனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

Tags:    

Similar News