உள்ளூர் செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தொழிலாளியை முட்டி தூக்கி வீசிய மாடு

Published On 2023-09-08 10:48 GMT   |   Update On 2023-09-08 10:48 GMT
  • மாணவியை மாடு முட்டி தூக்கியது போல் பழவந்தாங்கலில் தொழிலாளி ஒருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மாட்டை விரட்டியடித்து உயிருக்கு போராடியவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆலந்தூர்:

அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக தாயுடன் நடந்துசென்ற சிறுமியை கடந்த மாதம் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்தது.

போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றிய கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாணவியை மாடு முட்டி தூக்கியது போல் பழவந்தாங்கலில் தொழிலாளி ஒருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழவந்தாங்கல், பி.வி. நகர், 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (51). தொழிலாளி. மனைவியை பிரிந்து வாழும் இவர் தங்கை வீட்டில் தங்கி இருந்தார்.

இவர் நேற்று இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். நேரு நெடுஞ்சாலை வழியாக உழவர் சந்தை அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென ஆவேசம் அடைந்து கண்ணனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிறு கிழந்து குடல் வெளியே சரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த மாட்டை விரட்டியடித்து உயிருக்கு போராடிய கண்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்ணனை மாடு முட்டி தூக்கி வீசிய பகுதியில் கால்நடைகள் அதிகம் சுற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொழிலாளியை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News