உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் ரெயில்வே கேட் தடுப்பு கட்டையில் சிக்கிய கண்டெய்னர் லாரி

Published On 2024-02-13 10:07 GMT   |   Update On 2024-02-13 10:07 GMT
  • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

கண்டமங்கலம்:

விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News