தீக்குளிக்க முயன்ற ஆட்டோ வேலுவை போலீசார் அழைத்து சென்ற காட்சி.
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
- கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் நேரில் சென்றார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கடலூரை சேர்ந்த ஆட்டோ வேலு என்பதும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இவர் ஒரு பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.