திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று விமானத்தில் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில தினங்களாக தங்கத்தை போன்று வெளிநாட்டு பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ள நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தை போன்று வெளிநாட்டு பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த பயணிகளில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த முகமது அனீஸ் (வயது 37) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவரது உடைமையிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் சவுதி அரேபியன் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் அந்த வெளிநாட்டு பணம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாரிடம் இருந்து வாங்கினார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.