உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி அதிக வாடகை வசூலிப்பதாக புகார்- மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு

Update: 2022-12-07 10:23 GMT
  • மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வியாபாரிகளிடையே மோதலை தவிர்க்க மார்க்கெட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்‌

மதுரை:

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு மோதலை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத வாடகை கடைகளும், 800-க்கும் அதிகமான தரைக்கடைகளும் உள்ளன. இங்குள்ள வியாபாரிகள் மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு உள்ள காலங்களில் சுமார் 36 மாத வாடகையை கட்டாயப்படுத்தி மதுரை மாநகராட்சி வசூல் செய்து வருகிறது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், கோர்ட்டு உத்தரவின்படி புதிதாக அமல்படுத்திய நிலுவைத் தொகை வாடகைக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை ரத்து செய்வது, வாடகை தொகையில் ஜி.எஸ்.டி. விலக்கு பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அதன்படி சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள சுமார் 75 சதவீத கடைகள் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்தனர். ஆனாலும் 25 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இன்று விற்பனைக்கு வந்த காய்கறிகளை பொது மக்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.

எனவே திறக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் தடையின்றி நடைபெறும் வகையிலும், வியாபாரிகளிடையே மோதலை தவிர்க்கவும் மார்க்கெட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்‌

சுமார் 75 சதவீதகடைகள் அடைக்கப்பட்டதால் சென்ட்ரல் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் பரவை மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாட்டுத் தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வளாகம் வாகனங்கள், மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்த்து எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாட்டுத் தாவணி வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Similar News