உள்ளூர் செய்திகள்

புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்: பாலியல் தொல்லையால் மாணவி விஷம் குடிப்பு

Published On 2022-11-08 11:41 IST   |   Update On 2022-11-08 11:41:00 IST
  • தலைமறைவாக உள்ள சபரியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
  • வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி, அந்த நபரிடம் பேசியுள்ளார்.

இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சபரியுடன் பேசுவை நிறுத்தி விடு, இல்லையென்றால் கல்லூரி படிப்பு பாதிக்கப்படும் என பெற்றோர் மகளுக்கு அறிவுரை கூறினர். இதன் பிறகு சபரியுடன் பேசுவதை மாணவி நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இதில் போலீசாருக்கு பகீர் தகவல் கிடைத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நீ என்னுடன் பேசி பழகிய படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் சத்தம் போடுவார்கள் என பயந்தார். மனம் உடைந்த மாணவி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை அறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக சபரி முயற்சித்து வருகிறார். போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News