உள்ளூர் செய்திகள்

நீரிழ் மூழ்கி உயிரிழந்த ஜீவா.

நிலக்கோட்டை அருகே கால்வாய் நீரில் அடித்துச் சென்ற கல்லூரி மாணவர் பலி

Published On 2022-08-16 04:46 GMT   |   Update On 2022-08-16 04:46 GMT
  • நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
  • உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

நிலக்கோட்டை:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை மகன் ஜீவா(20). கல்லூரியில் படித்து வந்தார். இவரது உறவினரான நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீவா வந்திருந்தார்.

பின்னர் இவர் குளிப்பதற்காக சி. புதூர் அருகே வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தற்போது திறந்து விட்டுள்ள பெரியாறு பிரதான கால்வாய் நீரில் குளிக்க சென்றார். அப்போது கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஜீவாவை நீர் அடித்துச் சென்றது.

இதனை எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் நீரில் சிக்கிய ஜீவாவின் உடலை நீண்டநேரம் போராடி மீட்டனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜீவாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின்படி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News