உள்ளூர் செய்திகள்

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம்- கலெக்டர் தகவல்

Published On 2022-08-11 11:03 GMT   |   Update On 2022-08-11 11:03 GMT
  • மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
  • அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் ரூ.12 லட்சம் வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கான செலவினமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்புக்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கான செலவினமான ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கு (1000 ச.மீட்டருக்கு) ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

எனவே இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600115 அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News