செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
- மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், திருமலைராஜன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மோகன்ராம்(வயது19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டுபடித்து வந்தார்.
மோகன்ராமுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உடன் படிக்கும் நண்பர்கள் 7 பேருடன் செங்கல்பட்டு அருகே உள்ள இருங்குன்றம் பள்ளி பகுதியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றார். அனைவரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது மோகன்ராம் ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மோகன்ராம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான மோகன்ராமின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.