செங்கல்பட்டு அருகே அரசு பஸ்- வேன் மோதல்: 7 பேர் காயம்
- சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது என்பதும் தெரியவந்தது.
- செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 11½ மணியளவில் செங்கல்பட்டு அடுத்த பழவேலி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது அதே மார்க்கமாக பின்னால் வந்த வேன் ஒன்று அரசு பஸ்சின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. அதில் வேன் பலத்த சேதமடைந்து அதில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் சிங்காரத்தோப்பு வீடு, பொன் முத்துப்பிள்ளை தெருவை சேர்ந்த மாலதி (35), முருகன் (45), ஓட்டி கிராமம் வெல்லிங்டன் தெருவை சேர்ந்த கஸ்தூரி (வயது 49), கோபிநாத் (17), ஹரிஷ் (10), மதன்ராஜ் (26), இந்திரா (32) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பதும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது என்பதும் தெரியவந்தது.
காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி்க்கப்பட்டனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.