உள்ளூர் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் மண் திருடிய 6 பேர் கைது

Published On 2022-12-04 11:56 GMT   |   Update On 2022-12-04 11:56 GMT
  • கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர்.
  • 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.

சோமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கட்ரம்பாக்கம் பகுதியில் சவுத்ரி கால்வாயில் தொடர்ந்து மண் திருடப்படுவதாக மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி மற்றும் சோமங்கலம் போலீசாருக்கு காட்ரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன் தெரிவித்தார். அதன்பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காட்ரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் ஏரி கால்வாய் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் திருடியபோது 7 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரி போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசகுமார் (வயது 29), பழனி (36), மகேந்திரன் (38), செல்வகுமார் (35), சக்திவேல் (42), கோவிந்தராஜ் (51) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் மண் திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.

Similar News