உள்ளூர் செய்திகள்

வேலை தருவதாக செல்போனில் தொடர்புகொண்டு பேச்சு: பெண் என்ஜினீயரின் வங்கி கணக்கில் ரூ.92 ஆயிரம் மோசடி

Published On 2023-03-28 17:21 IST   |   Update On 2023-03-28 17:21:00 IST
  • வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி மர்ம கும்பல் நூதனமான முறையில் ரூ.92ஆயிரம் பணத்தை மோசடி செய்து சுருட்டியது தெரிந்தது.
  • பிரியதர்சினி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போரூர்:

போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்சினி என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் வேலை தேடி வந்தார். மேலும் வேலை வாய்ப்புக்காக பல்வேறு இணையதளங்களில் அவர் தனது விபரங்களை பதிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் பிரியதர்சினியை "வாட்ஸ் அப்" கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். யூ டியூப் சேனல் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிய வேண்டும். நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்.

மேலும் தனது உதவியாளர் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான விபரங்களை விளக்கி கூறுவார் என்றும் கூறினார்.

சிறிது நேரத்தில் பிரியதர்சினியை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய பிரியதர்சினி 2 தவணைகளாக ரூ.5ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

ஆனால் மர்ம பெண் கூறியபடி எந்தவொரு பணமும் திரும்ப கிடைக்க வில்லை. மேலும் பிரியதர்சினியின் வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.62 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிய தர்சினி அந்த இளம் பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் எண் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி மர்ம கும்பல் நூதனமான முறையில் ரூ.92ஆயிரம் பணத்தை மோசடி செய்து சுருட்டியது தெரிந்தது. இதுகுறித்து பிரியதர்சினி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News