உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையத்தில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை- வெள்ளத்தில் சிக்கிய பஸ்

Published On 2023-11-07 14:08 IST   |   Update On 2023-11-07 14:08:00 IST
  • பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது.
  • மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காவேரி, ஆவாரங்காடு, வெப்படை, ஆலாம்பாளையம், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைசுமார் 4 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.

வழக்கமாக பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் அந்த மழை தண்ணீர் பள்ளிபாளையத்தில் உள்ள வடிகால்கள் மூலம் காவிரி ஆற்றில் கலக்கும். தற்போது பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வடிகால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தண்ணீர் செல்ல குழாய் மட்டும் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக இன்று அதிகாலை 3 மணி முதல் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மழை வெள்ளம் புகுந்தது.

அதிகாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் பள்ளிபாளையம் பகுதிக்கு வந்தது. பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. தொடர்ந்து பஸ் செல்ல முடியவில்லை. இதையடுத்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாகதீயைணப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்த பயணிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே தொடர்ந்து மழை வெள்ளம் ஆறாக ஓடிக் கொண்டு இருப்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. காலை 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி சென்றனர். மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

எருமப்பட்டி-10, குமாரபாளையம்-74, நாமக்கல்-6, புதுச்சத்திரம்-2.30, ராசிபுரம்-23, சேந்தமங்கலம்-20, திருச்செங்கோடு-80, கொல்லிமலை செம்மேடு-21.

Tags:    

Similar News