உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்- வளர்ப்பு நாயால் தப்பினார்

Published On 2023-08-09 04:21 GMT   |   Update On 2023-08-09 04:21 GMT
  • ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை தனபாக்கியம் ஒடித்துக் கொண்டிருந்தார்.
  • தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராம பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை கொலகூர் மிதுவகாடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்.

அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது.

இந்த நிலையில் தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தனபாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News