உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ஆனந்த், நந்தினி.

வடலூரில் குழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது

Published On 2023-02-23 03:56 GMT   |   Update On 2023-02-23 03:56 GMT
  • வடலூரில் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, சுடர் விழி, சீர்காழி சட்ட நாதபுரம் ஆனந்தன், புவனகிரி கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் புவனகிரி, வடலூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர்.

கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். எனவே வடலூரில் பிடிபட்ட குழந்தை விற்பனை கும்பலுக்கு தமிழகத்தில் பிற குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வடலூர் நறிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் மற்றும் கடலூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நந்தினி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News