உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளுடன் நரிக்குறவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

நரிக்குறவர்களின் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Published On 2022-08-13 10:56 GMT   |   Update On 2022-08-13 10:56 GMT
  • நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.
  • நரிக்குறவர்கள் மாற்று இடம் தரும் வரை நாங்கள் இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம்.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆறு ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பொன்னேரி வருவாய் கோட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவுப்படி இவர்களுக்கு கடந்த 1 வாரமாக நோட்டீஸ் கொடுத்து ஒட்டி வந்தனர். இந்த நிலையில் குன்னம் சேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை பொதுப் பணித்துறை- வருவாய் துறை அதிகாரிகள் 21 நாட்களில் காலி செய்ய நோட்டீஸ் கொடுக்க வந்தனர் இதனை அறிந்த அப்பகுதி நரிக்குறவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 20 வருடமாக இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் சாலை வசதி, குடிநீர், மின்சாரம் கொடுத்து குடியிருக்க செய்த அரசாங்கம், திடீரென காலி செய்ய சொல்வதால் குழந்தைகளுடன் எங்கு செல்வோம் எனவும், மழைக்காலத்தில் எங்கு போய் தங்குவோம் என்றும் கேட்டனர்.

பள்ளியில் படித்து வருகின்ற பிள்ளைகளுக்கு என்ன வழி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, அனைத்தும் இதே இடத்தில் இருப்பதாகவும் எப்படி, அட்ரஸ் இல்லாமல் வாழ்வது என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனிடயே நரிக்குறவர்கள் மாற்று இடம் தரும் வரை நாங்கள் இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News