உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிபவர்களுக்கான நல வாரிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-20 09:39 GMT   |   Update On 2023-05-20 09:39 GMT
  • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டு உள்ளது. இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6வது தளம், சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியரகம், ராஜாஜி சாலை, சென்னை-1 ல் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபையின் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபையின் ஆயர்கள், சினாட் ஆப் பெண்ட கோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையின நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

இதில் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News