உள்ளூர் செய்திகள்

நடைபயண பொதுக்கூட்டங்களில் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள்- அண்ணாமலை

Published On 2023-07-27 13:39 IST   |   Update On 2023-07-27 13:39:00 IST
  • நடைபயணத்தின் போது புள்ளி விபரங்களுடன் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும்.
  • அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.

மதுரை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நாளை ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்குகிறேன். இங்கு தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் முதல் பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறேன்.

அதன்படி முதல் தொகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்கிறேன். அப்போது மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூற இருக்கிறேன்.

இந்த நடைபயணத்தின் போது புள்ளி விபரங்களுடன் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும். தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு தொடங்கிவைக்க இருக்கிறார். வரும் நாட்களில் நடைபெறும் தொடர் நடைபயணத்தின்போது பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மேலும் நடைபயணத்தின் இடையே 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் அதிக பயனாளர்கள் என்ற அடிப்படையில் அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று கூறுவது முதலமைச்சருக்கு அழகு கிடையாது. ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News