உள்ளூர் செய்திகள்

போலீசாருடன் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் திடீர் கைது- போலீசாருடன் வாக்குவாதம்

Published On 2023-03-10 13:14 IST   |   Update On 2023-03-10 13:14:00 IST
  • என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது.
  • புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்தார்.

சேத்தியாத்தோப்பு:

என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக வளையமாதேவி கிராமத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களின் எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தினர். மேலும், நாளை பந்த் போராட்டம் அறிவித்தனர்.

இந்நிலையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்தார். அங்கு நிலங்களை கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பேசினார்.

அப்போது அங்கு வந்த போலீசார் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை திடீரென கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொதுமக்களை சந்திக்க தான் வந்தேன். போராட்டம் நடத்த வரவில்லை. என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News