ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்சில் 423 கிலோ குட்கா-புகையிலை கடத்தல்: உரிமையாளர் உள்பட 9 பேர் கைது
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 423 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.
- போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக சமயநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்-திருமங்கலம் ரோட்டில் சமயநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனசோதனை நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஒரு ஆம்னி பஸ், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
அதன் அருகில் நின்ற 2 கார்களில் சில நபர்கள் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டியை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 423 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்சில் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பஸ் மற்றும் கார்களில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்னி பஸ்சின் உரிமையாளரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுனில் முத்தையா, டிரைவரான பாலாஜி பீடா மண்டலம் நாயுடு வீதியை சேர்ந்த டோட்டா பாண்டி, கண்டக்டரான கடப்பாவை சேர்ந்த வெங்கடராமி ரெட்டி, வல்லபரத்தை சேர்ந்த தாடிக்கொண்டா, பெங்களூருவை சேர்ந்த சந்துரு, மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அருண்குமார், கோசாகுளம் சிவசக்தி நகர் டேவிட் தினகரன், ராஜபாளையம் டி.பி. மில் ரோடு ராஜேந்திரன், சிவா ஆகிய 9 பேரை சமயநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து ஆம்னி பஸ்சின் உரிமையாளர், டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதுரையில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.