ஆலந்தூர் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து 85 வயது மூதாட்டி தர்ணா போராட்டம்
- தனது மகன் ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி விட்டான். நான் சாலையோரம் வசித்து வருகிறேன்.
- என்னை ஏமாற்றி என்னுடைய வீட்டின் பாத்திரங்களை எடுத்து வந்துவிட்டனர் என்று மூதாட்டி பரிதாபத்துடன் கூறினார்.
ஆலந்தூர்:
ஆலந்தூர், எம்.கே.என். சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இன்று காலை 10.30மணி அளவில் 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் நீதிமன்றத்திற்கு வந்தார்.
திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கோஷங்களும் எழுப்பினார். அவர் அருகே நாயும் படுத்துக்கொண்டது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மூதாட்டியிடம் கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள் விசாரித்தனர். அவர், மீனம்பாக்கம் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த ராணி என்பது தெரிந்தது.
தனது மகன் ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி விட்டான். நான் சாலையோரம் வசித்து வருகிறேன். என்னை ஏமாற்றி என்னுடைய வீட்டின் பாத்திரங்களை எடுத்து வந்துவிட்டனர் என்று பரிதாபத்துடன் கூறினார்.
சிறிது நேரத்தில் மூதாட்டி ராணியின் மகள் ஒருவர் அங்கு வந்தார். அவரும் மற்ற வக்கீல்களும் மூதாட்டி ராணியிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து போகச்செய்தனர்.
இச்சம்பவத்தால் ஆலந்தூர் கோர்ட்டு வளாகம் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.