யூ-டியூப் சேனலில் பதிவிடுவதற்காக நெரிசல் மிகுந்த சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசம்- 5 வாலிபர்கள் கைது
- யூ-டியூப் சேனல்கள் நடத்தி வரும் இவர்கள் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை கவருவதற்காக சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தது தெரியவந்தது.
- தனிப்படை போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலானவை. 2 ஆட்டோக்கள் ஒன்றாக போனால் ஒட்டுமொத்த ரோடும் அடைக்கப்பட்டு விடும் என்ற நிலையில் தான் இங்கு போக்குவரத்து சாலைகள் உள்ளன.
இந்தநிலையில் ஒரு சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது, வீலிங் செய்வது போன்ற அதிசாகச பயணங்களை மேற்கொண்டு வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்புவது ஆகிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை நகரில் முக்கிய சாலைகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்துகளும், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மேற்கண்ட சம்ப வங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வல்லபாய் படேல் ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக 'வீலிங்' செய்து கொண்டு இருந்தனர். அதனை 2 பேர் வீடியோ எடுத்தனர். உடனே தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர்.
5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் கோரிப்பாளையம், முகமதியர் தெரு ராஜா முகமது மகன் சேக் முகமது (வயது 21), சரவணன் மகன் நல்லசிவம் (வயது 22), ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் ராஜகோபால் மகன் மதன்குமார் (வயது 21), கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெரு ஜின்னா மகன் சாஜன் (வயது 21), பொதும்பு சோனை கோவில் தெரு, பிச்சை மகன் சபரிமலை என்ற பிரதீஸ் (வயது 22) என்பது தெரியவந்தது.
யூ-டியூப் சேனல்கள் நடத்தி வரும் இவர்கள் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை கவருவதற்காக சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கேமிரா, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.