உள்ளூர் செய்திகள்

பள்ளியில் சுகாதாரமற்ற தண்ணீர் குடித்த 32 மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு

Update: 2022-08-15 09:16 GMT
  • சிறுளபாக்கம், அண்ணா மலைசேரி குப்பத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
  • பள்ளியில் குடிநீருக்கு பயன்படுத்திய சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த சிறுளபாக்கம், அண்ணாமலைசேரி குப்பத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளியில் படித்த 32 மாணவ-மாணவிகளுக்கு திடீரென உடல் நிலைபாதிப்பு ஏற்பட்டது. காய்ச்சலில் அவதிப்பட்டு வரும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

விசாரணையில் பள்ளியில் குடிநீருக்கு பயன்படுத்திய சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தப்படுத்தாமல் இருந்ததும் இதனால் தண்ணீர் மாசுபட்டு வந்ததும் தெரியவந்தது தெரிகிறது. இதே போல் அண்ணாமலை சேரி குப்பம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப் பட்டனர். இதைத் தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது.

இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 7 மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் மற்றும் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். டிராக்டர்கள் மூலம் கிராமத்தில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

Similar News